மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை : கைதிகள் இடமாற்றம்
புதிய இணைப்பு
மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு 8.00 மணியளவில் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதை அடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையுடன், சிறைச்சாலையின் மேல் பாதுகாப்பு அறைகளில் இருந்த சிறை அதிகாரிகளை கைதிகள் கற்களாலும் வேர்களாலும் தாக்கியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த அமைதியின்மையால் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், சிறையில் இருந்த 25 பெண் கைதிகளை அவர்களின் பாதுகாப்புக்காக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று(23) அதிகாலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வந்ததாகவும், சிறைச்சாலையின் சேமிப்பு அறை மற்றும் பல பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் மேலதிக காவல்துறை குழுக்கள் மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரிகளை வரவழைக்கவும், தீயணைப்பு படையினரை தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதியின்மையால் எந்தக் கைதிகளும் காயமடையவோ அல்லது உயிராபத்து ஏற்படவோ இல்லை எனவும் இது குறித்து கைதிகளின் உறவினர்கள் கவலைப்பட வேண்டாம் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மாத்தறை (Matara) சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே நேற்று (22) இரவு இந்த மோதல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது இந்த பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த சுமார் 500 கைதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
