தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழ் எம்.பி
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கொட்டகலை நகரிலுள்ள தனியார் நிகழ்வு மண்டபத்தில் (05) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் நாட்டுக்காக உழைக்கும் மக்கள், அந்நியச் செலாவணி கொண்டு வருபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் ஆகிறது, ஆனால் அவர்களுக்கு 500-950 ரூபாய்தான் வழங்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பளம் அதிகரிக்கப்படவில்லை
மேலும் அவர் கூறுகையில், இன்று மக்கள் வாழமுடியாது, அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன, வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன ஆனால் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
அரசாங்கம் அதிகரித்தாலும் தோட்ட நிறுவனங்கள் செய்யாது, அதிபரிடம் தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை வரவழைத்து சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென கூறுங்கள்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுகிறது, இது நல்ல வேலை, அதேபோல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும்.
தேயிலை தோட்டங்களிள் நிலை
கடந்த அரசாங்கம் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்திய போதும் தோட்ட கம்பனிகள் வழக்குத் தொடுத்து அதனை தடுத்தி நிறுத்தின. இப்படி சென்றால் தோட்டங்கள் பறிபோகும்.
அரசாங்கம் தோட்டங்களை கம்பனிகளுக்கு வழங்கியது போன்று தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கினால் தேயிலை தோட்டங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு தேயிலை உற்பத்தி செய்யப்படும்.
தோட்டத் தொழிலாளர்கள் 20 கிலோ தேயிலை இலைகளை பறித்தால் 2000 ரூபாய் சம்பாதிக்க முடியும், இல்லையேல் தேயிலை தோட்டங்கள் காணாமல் போகும் எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் உடனடியாக அதிகரிக்க வேண்டும்.