யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை - அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடு
புதிய இணைப்பு
அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வானது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அனர்த்தங்களினால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற இடங்களை மையப்படுத்தி அரச திணைக்களங்கள், பாதுகாப்பு பிரிவினர், சமூக அமைப்புகளை அழைத்து அவர்களுக்கான முன்னாயத்தமாக நேற்றைய செயலமர்வு நடைபெற்றுள்ளது.
மழை வெள்ளம், இடி - மின்னல், சுனாமி தொடர்பான விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு அமைந்தது.
விழிப்புணர்வு
இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில், காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது
செய்திகள் - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (15.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் நாட்களில் வளிமண்டலத் தளம்பல் நிலைகள் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல்
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
