ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, அங்குள்ள அரச, தனியார் துறை ஊழியர்களை இன்று (12) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
இதன்படி பணியிடத்தில் கட்டாயம் சமூகமளித்து பணியில் இருக்க வேண்டிய ஊழியர்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அரசின் அறிவிப்பு
நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திறந்த வெளியில் வேலை செய்யும் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கும் வகையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, டுபாய், ஷார்ஜா, புஜைரா, அஜ்மான் மற்றும் ராசல் கைமா ஆகிய இடங்களில் நேற்று (11) பலத்த காற்று, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |