இந்தியா மீதான வரிவிதிப்பு: ரஷ்யாவின் லாபத்தைக் குறிவைத்த ட்ரம்ப்புக்கு அதிரடிப் பலன்!
இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கையானது வெற்றியைத் தந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளும் எண்ணெய் வர்த்தகமானது முட்டாள்தனமான நடவடிக்கை எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா மீதான அமெரிக்க அரசின் வரி விதிப்பு குறித்து அமெரிக்கக் கருவூலச் செயலர் ஸ்காட் பெசெண்ட் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க் கொள்முதல்
இதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்க் கொள்முதலில் ஈடுபடுவதால் இந்தியா மீது அமெரிக்காவால் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து இந்திய நிறுவனங்களின் எண்ணெய்க் கொள்முதல் சீர்குலைந்துள்ளது.

ஆகவே, வரி விதிப்பு நடவடிக்கை பெரும் வெற்றிகரமான ஒன்றாகவே அமைந்துவிட்டது.
வரிவிதிப்பு இன்னும் தொடருகிறது எனினும், அவற்றை நீக்க ஒரு வழி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
எங்களுடைய ஐரோப்பியக் கூட்டாளிகள் இந்தியா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் நிராகரித்துவிட்டனர்.
வர்த்தக ஒப்பந்தம்
அதற்கான காரணம், அவர்கள் இந்தியாவுடன் பெரும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகின்றனர்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரும்.

உக்ரைன் மீதான போருக்கு முன், ரஷ்யாவிடமிருந்து சுமார் 2 அல்லது 3 சதவீதம் எண்ணெய் மட்டுமே இந்தியாவால் கொள்முதல் செய்யப்பட்டது.
எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து கொள்முதல் 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது இதனால் ரஷ்யாவுக்குப் பெரும் லாபம் கிடைத்தது.
ஆனால், இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் எண்ணெயை யார் வாங்குகிறார்கள் என்றால், ஐரோப்பியர்கள்.
அவர்கள் தங்களுக்கெதிரான போருக்குத் தாங்களே நிதியளிக்கின்றனர், இது முட்டாள்தனத்தின் உச்சம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |