அமெரிக்க விமானங்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்? அச்சத்தில் விமானிகள்!!
காபூல் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க விமானங்களை நோக்கி ஐ.எஸ்.கே. தீவிரவாதிகளால் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் அமெரிக்கப்படைகள்.
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்கள், கார் குண்டுத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் நேரடியான கொமாண்டோ பாணியினாலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று புலனாய்வுத் தகவல்களை அமெரிக்கா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் வெளியிட்டிருந்தன.
இப்படியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில்தான் காபூலில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் காபூலில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விமானங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கையாக இருக்கின்றன அமெரிக்கப் படைகள்.
அதனால், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் விமானங்கள் கூடியவரை nose dive combat landings அல்லது rapid diving combat landings என்று அழைக்கப்படுகின்ற தரையிறக்கங்களையே மேற்கொண்டு வருகின்றன.
அதாவது நீண்ட தூரம் தாழ்வாகப் பறந்து தரையிறங்கும் முறைகளை மாற்றி, விமான ஓடுபாதை வரை உயரப் பறந்துவந்து, ஓடுபாதைக்கு அருகே வந்ததும் சடுதியாக தரையிறங்கும் முறையை கடைப்பிடித்து வருகின்றன.
அதேபோன்று, flares என்று அழைக்கபடுகின்ற வெப்பக் குண்டுகளையும் அவ்வப்பொழுது வீசி, ஒருவேளை விமானங்களை நோக்கி எறிகணைகள் வீசப்பட்டால் அந்த எறிகணைகள் விமானத்தைத் தாக்காமல் அவற்றைத் சிசை மாற்றும்படியான காரியங்களையும் செய்து வருகின்றது அமெரிக்கப் படை.
அதேவேளை அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் நிறைவு பெறுகின்ற தறுவாயில் கடைசியாக வெளியேறத் தயாராக இருக்கும் படைவீரர்களைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தும் அபாயமும் அங்கு காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.