ட்ரம்ப் அதிரடி: உக்ரைனுக்கு உளவுத்தகவலை அளிப்பதை நிறுத்தியது அமெரிக்கா
ரஷ்யாவுடனான (russia)போரில் உக்ரைனுக்கு(ukraine) உளவுத் தகவல்கள் மூலம் அளித்துவந்த உதவியை அமெரிக்கா(us) நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு சா்வதேச உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் ஜோன் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனுடன் ராணுவ உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திவைக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(donald trump) உத்தரவிட்டுள்ளாா். நான் ஏற்கனவே கூறியுள்ளபடி, அவா் அமைதிக்கான ஜனாதிபதி. அவரின் தலைமையில் ஒருபோதும் போா் நடைபெற்றதில்லை. எனவே, இப்போது நடைபெறும் போா்களை முடிவுக்குக் கொண்டுவர அவா் விரும்புகிறாா்.
உக்ரைன் ஜனாதிபதிக்கு அமைதியில் ஆர்வம் உள்ளதா…!
உக்ரைன் போரைப் பொறுத்தவரை அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கிக்கு(volodymyr zelenskyy) அமைதியில் ஆா்வம் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவேதான் ராணுவ உளவுத் தகவல்களை அவருக்கு அளிப்பதை நிறுத்திவைத்து, அமைதியை நிலைநாட்ட ஸெலென்ஸ்கிக்கு வாய்ப்பளிக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளாா்.
அமைதியை நிலைநாட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை
ராணுவ ரீதியிலும் உளவுத் தகவல் பரிமாற்ற ரீதியிலும் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா நிறுத்திவைத்துள்ள உதவிகள் பிற்காலத்தில் மீண்டும் அளிக்கப்படும். ஆனால், போா் நிறுத்த முயற்சியை முன்னெடுத்துச் சென்று உலகில் அமைதியை நிலைநாட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் இப்போது தேவைப்படுகிறது என்றாா் அவர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்
இந்தத் தகவலை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸும் உறுதிப்படுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘
உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல் அளிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்கிறோம். உளவு விவகாரத்தில் அந்த நாட்டுடனான உறவின் அனைத்து அம்சங்களையும் மறுஆய்வு செய்யும்வரை இது தொடரும்’ என்றாா்.
இதேவேளை அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக்கூடாது என பிரிட்டனுக்கு வெள்ளை மாளிகை தடைவிதித்துள்ளது.
அமெரிக்கா ‘உக்ரைனுக்கு வெளியிடக்கூடியவை’ என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில தகவல்களை பிரிட்டனுடன் பகிர்ந்து வந்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உளவுச் செய்திகளை உக்ரைனுக்கு பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
