அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : தீவிரமடையும் ராஜதந்திர முயற்சிகள்
அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்களது ராஜதந்திர முயற்சிகளை பிராந்திய நாடுகள் மற்றும் மத்தியஸ்தர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கான புதிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டாலும், இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவிக்கையில், போரை உடனடியாக நிறுத்தி, திங்கட்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான புதிய திட்ட வரைவு வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானிடம் பகிரப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள்
இருப்பினும், ஈரான் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக சம்மதிக்கவில்லை.

இரண்டு கட்டங்களாகப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 45 நாட்களுக்கு தற்காலிகப் போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
முன்னதாக அமெரிக்கா முன்மொழிந்த 48 மணிநேர தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்த போதும் இதற்கான நிரந்தரத் தீர்வே அவசியம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
இந்தநிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையில்லா கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்ய வேண்டும்.
போரின் நிலையற்ற தன்மை
போர் நிறுத்தம் என்பது வெறும் துப்பாக்கிகளை மௌனமாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என மத்தியஸ்தர்கள் கருதுகின்றனர்.

தற்போது வரை எந்தவொரு முறையான போர் நிறுத்தமும் நடைமுறைக்கு வரவில்லை மற்றும் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு நிலையற்ற சூழலிலேயே உள்ளன.
எனினும், சர்வதேச நாடுகள் இந்த மோதலைத் தணிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |