உக்ரைனில் ஜோ பைடன் - புடின் போட்ட தப்புக் கணக்கு
உக்ரைன் மீது போர் தொடுத்தமை, வெளிப்படையான தவறு என்பதை விளாடிமீர் புடின் தற்போது உணர்ந்திருப்பார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜோ பைடன், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.
பைடனின் ரகசிய பயணம்
'நியூயோர்க் டைம்ஸ்' செய்தியின்படி, போலந்து எல்லையில் மிகவும் ரகசியமான முறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகையிரதம் மூலம் உக்ரைனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
போலந்தில் இருந்து உக்ரைனின் தலைநகர் கியேவுக்கு பைடன் மேற்கொண்ட பயணம் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, பைடன் தனது மனைவி ஜில்லுடன் ஒரு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அமைதியாக வோஷிங்டனில் இருந்து புறப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தலைநகர் கியேவ்விற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பு
ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு அண்மிக்கும் நிலையில், ஜோ பைடனின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது அந்த நாட்டு அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியை சந்தித்து ஜோ பைடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது உக்ரைனுக்கான அசைக்க முடியாத அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
ஜோ பைடனின் இந்த விஜயமானது உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் அசைக்க முடியாத மற்றும் உறுதியான கடப்பாட்டை மீள உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது நாட்டிற்கு அமெரிக்கா வழங்கும் அசைக்க முடியாத ஒத்துழைப்பிற்கு உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி தனது நன்றி தெரிவித்துள்ளார்.
500 மில்லியன் டொலர் ஆயுத உதவி உட்பட உக்ரைனுக்கு மிகவும் முக்கியமான இராணுவ உபகரணங்களை வழங்குவதாக ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
புடினின் எண்ணம்
உக்ரைன் பலவீமானது எனவும் மேற்குலக நாடுகள் பிளவுபட்டுள்ளதாகவும் விளாடிமீர் புடின் எண்ணினார் எனக் கூறியுள்ள ஜோ பைடன், நேட்டோ நாடுகள் ஒற்றுமையாக இருக்காது என நினைத்தார் எனவும் கூறியுள்ளார்.
ஆகவே உக்ரைன் விடயத்தில் விஞ்சி விட முடியும் என விளாடிமீர் புடின் எண்ணிய போதிலும் அது சரியானது என ரஷ்ய அதிபர் தற்போது எண்ண மாட்டார் எனவும் ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மூன்று நாள் பயணமாக போலந்து பயணமாகியுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் படையினர் போதுமான ஆயுதங்களைப் பெற்றிருப்பதை உறுதி செய்யும் வகையில் ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் பிரசல்ஸ்சில் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.