இலங்கை விவகாரம் - உலகத் தமிழர் பேரவையுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பேச்சு
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய நகர்வுகள் எடுக்கப்படுவதான பரப்புரைகளுடன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளூரிலும் உலக அரங்கிலும் நகரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புலம்பெயர் தமிழ் அமைப்பான உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்கனவே தொடர்பாடல்களை கொண்டுள்ள உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களுடன் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசியப் பிரிவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ நேற்று(20) பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இலங்கை நிலரங்கள்
இந்தப் பேச்களின் போது இலங்கையின் தற்போதைய நிலரங்கள் குறித்து உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடியதாக தெரிகிறது.
இந்தப் பேச்சுக்களின் போது தெற்காசியாவில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய விடயங்களை நிலைநாட்டும் நகர்வுகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனக் குறிப்பிட்ட டொனால்ட் லூ இலங்கையில் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கங்கள் முன்னகர்த்தப்படவேண்டிய அணுகுமுறைகள் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்த பேச்சுக்கள் குறித்து முதலில் டுவிட்டர் பதிவு ஊடாக பகிரங்கப்படுத்திய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தச் சந்திப்பு குறித்த நிழற்படங்களையும் வெளியிட்டுள்ளது.