நவி பிள்ளைக்கு நோபல் பரிசு எதிரொலி : சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன்னாள் நீதிபதியும், புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவி பிள்ளைக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாட்டு அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணைகளைக் கண்டிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இருப்பையே முடிவுக்குக் கொண்டுவருவோம்
இது தொடர்பாகப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது அச்சுறுத்தல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்". "இல்லையெனில் நாங்கள் அந்த நீதிமன்றத்தின் இருப்பையே முடிவுக்குக் கொண்டுவருவோம்" என்று எச்சரித்துள்ளார்.

நீதிமன்றம் அமெரிக்க அதிகாரிகளைக் குறிவைப்பதாகவும், நாட்டின் இறையாண்மையைச் சீர்குலைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அமெரிக்க குடிமக்களை அந்த நீதிமன்றம் விசாரிப்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் தடைகளுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு
இதனிடையே, ஐசிசி மீதான அமெரிக்காவின் தடைகளுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐசிசி நிர்வாகம் இதைச் சர்வதேச சட்டத்தின் மீதான தாக்குதல் எனக் கூறியுள்ளதுடன், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் நீதித்துறைக்கு ஏற்பட்ட பின்னடைவு என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் முடிவை வரவேற்றுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |