நான்காம் கட்டத்தில் அபாயநிலை!! அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஜேர்மனியில் கொரோனா தொற்று வீரியமாக உள்ளதால் ஜேர்மனி மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல அமெரிக்கர்கள் டென்மார்க்குக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் எச்சரிக்கை நிலையை நான்காம் கட்டத்துக்கு உயர்த்தியுள்ள அமெரிக்கா, முழுமையாக தடுப்பூசி போட்டவர்களைக் கூட தொற்றுப் பீடிக்கலாம் என்பதால் ஜேர்மனிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென எச்சரித்துள்ளது.
பெல்ஜியம், குரோஷியா, ஹங்கேரி, ஒஸ்திரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் 4 ஆம் கட்ட கொரோனா எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்கா, ஒப்பீட்டு ரீதியில் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் தொற்று குறைவு என்பதால் மூன்றாம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நான்காவது அலையில் சிக்கி உள்ள ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 643 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளதால் பல மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் தடுப்பூசி ஏற்றாவிட்டால் மரணிப்போம் என்ற கடும் எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ள ஜேர்மனி சுகாதார அமைச்சர், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.