அடுத்தடுத்த திருப்பங்கள் - சர்வதேச நாடுகளை மிரள வைக்கும் வடகொரியா
வடகொரியாவில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்வதாகவும் அரச தலைவர் கிம் ஜாங் உன் இன் சகோதரிக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வட கொரிய அரச தலைவர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் (வயது 34), எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்றுள்ளதுடன், கிம் ஜாங் அன்னின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். அது மாத்திரமின்றி, அவரது அரசியல் வாரிசாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்கொரியாவின் தேசிய உளவுத்துறை, இவர் இரண்டாம் நிலை தளபதி என தகவல் வெளியிட்டிருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது அங்கு சென்ற வட கொரிய தூதுக்குழுவில் இவர் வடகொரியாவின் முகமாக விளங்கினார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இவர் முக்கிய பங்கு வகித்தார். தற்போது இவருக்கு வடகொரியா அரசில் மிக முக்கியமான முடிவு எடுக்கும் அமைப்பான தேச விவகாரங்கள் குழுவில் (எஸ்.ஏ.சி.) உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை அந்த நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இது முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது. இதேவேளை, மற்றொரு அதிரடி மாற்றம், தென் கொரியாவுடன் இணக்கமான உறவை மீண்டும் ஏற்படுத்த வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கொரியாவுடன் மீண்டும் நேரடி தொலைபேசி தொடர்பை ஏற்படுத்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் வடகொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், “தென்கொரியாவுடன் மீண்டும் நேரடி தொலைபேசிச்சேவையை (ஹாட்லைன்) மீட்டமைக்க தயார். நீடிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தயார். நாட்டின் தலைவர் அறிவுறுத்தி இருப்பதால் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.