ஜெனிவா களத்தில் மீண்டும் அமெரிக்கா -இலங்கைக்கு புதிய தூதுவர் விடுத்துள்ள தகவல்
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சங்(Julie Sung), இலங்கையில் தனது முன்னுரிமைக்குரிய விடயங்கள் எவை என்பதை தெரிவித்துள்ளார்.
இதன்படி மனிதஉரிமைகளும் பொறுப்புக்கூறலும் தனது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான மெய்நிகர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவை தளமாக கொண்ட ஸ்ரீலங்கா பவுண்டேசனின் உதவியுடன் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் இந்த மெய்நிகர் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த11ம்திகதி இடம்பெற்ற இந்த மெய்நிகர் சந்திப்பினை அமெரிக்க இரஜாங்க திணைக்களமும் இலங்கைக்கான புதிய தூதுவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது இரு நாடுகளிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள புதிய தூதுவர், தனது பதவிக்காலத்தில் கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றும் போது மனித உரிமைகள் சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கம் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுதல் ஆகிய விடயங்களே தனது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டுறவை உருவாக்கும் விவகாரங்கள் இவை என புதிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜெனீவா மனித உரிமை பேரவையில் மீண்டும் இணைந்துகொண்டுள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ள அவர் எதிர்வரும் அமர்வில் இலங்கை நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் உறுதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
