அமெரிக்க அதிபர் தேர்தல் : எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் நிதி உதவிகளை வழங்கப் போவதில்லை என எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான நிதியை தான் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, அவர் அதனை நிராகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்குகிறார்.
தேர்தல் பிரச்சாரங்கள்
இந்த நிலையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.
இதற்கமைய, உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, குறித்த செய்திகளை அவர் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |