இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம் குறித்து வெளியான தகவல்
இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட இலங்கைக்கான வாகன இறக்குமதிக்காக 188 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 34.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1.87 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த இறக்குமதிச் செலவு
இதேவேளை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பொருட்களின் மொத்த இறக்குமதிச் செலவு 2.9 வீதத்தால் அதிகரித்து 2.11 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் மொத்த இறக்குமதிச் செலவு 18.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21.3 வீத அதிகரிப்பாகும்.
அத்துடன் இலங்கையின் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 910 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு செப்டெம்பரில் 731 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.
எனினும், 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |