உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- இறுதி முடிவுக்கு தயாராகும் கூட்டமைப்பு!
ஸ்ரீலங்காவின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் கூடவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டமானது நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை கொழும்பில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றத்தை செய்த ஸ்ரீலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அணியினர் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 20ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது பற்றிய முடிவினை எடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை காலை கூடவுள்ளது.
ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவின் கொழும்பு செய்தியாளரான ஸ்ரீயான் சுஜித் நடத்திய தொலைபேசிக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கின்ற தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கடந்த வாரத்தில் தெரிவித்திருப்பதாக ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா என்பது குறித்த தீர்மானத்தை ஜே.வி.பியினர் இன்று அல்லது நாளைய தினம் அறிவிக்கவுள்ளனர்.
அதேபோல, ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஆளுங்கட்சியிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளைய தினம் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின்போதே நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி இறுதிமுடிவை ஆளுந்தரப்பு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்றைய தினம் மாலை ஆளும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவொன்று வழங்கப்பட்டதாகவும், அதில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும்படி கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.