பார்த்தீபன் கைது - கட்சிகளின் தூண்டுதலில் செயற்படுகிறதா காவல்துறை...! மணிவண்ணன் கண்டனம்
எங்களது கட்சியின் பிரசார நடவடிக்கையை குழப்புமாறு வேறு சில கட்சிகளின் தூண்டுதலில் பருத்தித்துறை காவல்துறையினர் செயற்பட்டார்களா என தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை (Point Pedro) பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு
மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை (Point Pedro) நகர பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பார்த்தீபனும் ஆதரவாளர்களும் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
எமது கட்சியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பது எமது பிரசாரத்தை குழப்பும் செயலாகவே உள்ளது.
எங்களது கட்சியின் பிரசார நடவடிக்கையை குழப்புமாறு வேறு சில கட்சிகளின் தூண்டுதலில் காவல்துறையினர் இவ்வாறு செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
எமது பிரசார நடவடிக்கையை திட்டமிட்டு குழப்பும் வகையான செயற்பாடாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
இது எமது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு. இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |