வவுனியா எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல்: தொடரும் விசாரணை
வவுனியா (Vavuniya) பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு தர்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர்களில் ஒருவர் அங்கு வேறு கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
போக்குவரத்து காவல்துறையினர்
இதன்போது போக்குவரத்து காவல்துறையினர் இருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு முச்சக்கர வண்டியில் காவல்துறையினர் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |