பெரும் பாதிப்புக்குள்ளான வவுனியா! ஏ9 வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர்
வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பலர் இடம்பெறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பெரும்பாலான குளங்கள் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வாண் பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததன் காரணமாக மக்கள் இடம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்து பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
பேராறு நீர்த்தேக்க பகுதி
பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டம் ஒன்றினையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இடம்பெயரும் மக்களுக்களுக்கு சமைத்த உணவுகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம்
இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண் மூடைகள் கொண்டு பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.
பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை தாண்டி 20.3 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான் கதவுகளும் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அத்துடன், நெளுக்குளம் - நேரியகுளம் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தி - கபில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |