வவுனியாவில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: பயிர்களுக்கு நோயை பரப்பும் புதிய பூச்சி இனம்(படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கைகளில் வண்ணத்துப் பூச்சியை போன்ற ஒரு பூச்சி இனம் நோயைப் பரப்பி வருவதாகவும் இதன் காரணமாக தமது செய்கை பெரும் பாதிப்பை அடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த நோயை கட்டுப்படுத்துவதற்கு பல வகையான கிருமி நாசினிகளை பயன்படுத்திய போதிலும் அவை எதுவும் பலனின்றி போயுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் தம் கடன் பட்டு செய்த நெற் செய்கை இவ்வாறான நிலைமையில் காணப்படுவதை இட்டு வேதனை அடைவதாகவும் கூறியுள்ளனர்.
கட்டுபடுத்த நடவடிக்கை
இந்நிலையில், கபிலநிற தத்தி, வெண் முதுகு தத்தி, மடிச்சு கட்டி போன்ற நோய்கள் தனது நெற் பயிர்களை தாக்கிய நிலையில் அவற்றை ஓரளவு கட்டுப்படுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான வண்ணாத்திபூச்சியை போன்ற புதிய பூச்சி இனம் ஒன்று தமது வயல்வெளிகளில் காணப்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பி. அற்புதச்சந்திரன், அந்து பூச்சி என அடையாளப்படுத்துவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு தமது விவசாய போதனாசிரியர் அவர்களை நாடி அது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிப்படைந்துள்ள வயல்கள்
மேலும், பாதிப்படைந்துள்ள வயல்களையும் இன்றைய தினம் அவர் பார்வையிட்டு பரவி வரும் பூச்சி இனம் தொடர்பாக அவர் உறுதிப்படுத்தி விவசாயிகளுக்கு தெளிவூட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |