ஐ.நாவில் போலி நடுநிலைமை வகித்து தமிழருக்கு உதவ தயார் இல்லை என்பதைக் காட்டியுள்ள இந்தியா!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போலி நடுநிலைமையை வகித்ததன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்கு தாம் தயார் இல்லை என்பதை இந்தியா எடுத்துக்காட்டியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், இன்று 1500 ஆவது நாளை எட்டியுள்ளதையடுத்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியின் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட, கடத்தப்பட்ட மற்றும் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களைத் தேடி, அவர்களது உறவுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று காலை கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மணிக்கூட்டு சந்தியூடாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் கொட்டகையை சென்றடைந்தனர்.
இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே ? வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பி, சமூக இடைவெளிகளை பேணியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

