கிழக்குப்பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்
புதிய இணைப்பு
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் வலிந்து போரைத் திணித்துக் கொண்டிருந்த இந்திய இராணுவத்திற்கு, சிறிலங்கா அரசுக்கும் எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து தன்னுயிர் நீத்த மருத்துவ மாணவனும் போராளியுமான தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (26.09.2024) முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இவ்வாண்டும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினரால் உணர்வெழுச்சியுடன் காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்த தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக
தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (26) மாலை 5.30
மணியளவில் அம்பாறை மாவட்டத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
திருகோணமலை
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (26) திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலியினை செலுத்தினர்.
திருகோணமலை குளக்கோட்டம்
தியாகி திலீபனின் 37வது நினைவு தினத்தினை முன்னிட்ட நிகழ்வு இன்று 26.09.2024 திருகோணமலையில் நினைவு கூரப்பட்டது.
திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில் திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாவீரர்களது பெற்றோர்கள் இருவர் நினைவுச் சுடரினை ஏற்றிவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[QN1MMX ]
வவுனியா
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், ஆயுதங்களைக் கைவிட்டு, அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
உண்ணாவிரதம்
1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது, 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும், அதன் தாக்கத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்திய போர் வீரர் திலீபன்.
தன் மக்களுக்காக 12 நாள்கள், அதாவது 265 மணி நேரமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உடலுக்குள் செலுத்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், தன் 23-ம் வயதில், 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார்.
அவரின் 37-வது நினைவு தினமான இன்று, இலங்கை தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
அந்தவகையில், தமிழர் தாயக காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
தியாக தீபம்
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், தமிழர்களுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.
சர்வதேச பொறிமுறையூடாகவே எமது பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியும். நாம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களை நாடியே எமது போராட்டங்களை முன்னெடுத்து நிற்கின்றோம் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |