வடக்கு கிழக்கில் ஆழிப்பேரலை அழிவின் உணர்வுபூர்வ அஞ்சலி!
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 18ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவக தூபியில் முதன்முதலாக இன்று இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுபேருரைகளும் இடம்பெற்றது.
மக்கள், அதிகாரிகள் அஞ்சலி
நிகழ்வில் மதகுருமார்கள், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான், நகரசபை தலைவர் இ.கௌதமன், தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர், செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, நிர்வாகத்தினர், பொதுஅமைப்புகள், பூந்தோட்டம் கிராமமக்கள், சமூகஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை, சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது வருட நினைவு தினமான இன்று கிண்ணியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நினைவு தினமானது கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்றது.
உயிர் நீத்தவர்களுக்கு பிரார்த்தனை
அதன் போது ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிண்ணியா கிளை உலமா சபை உறுப்பினர்கள், சூரா சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா உப்பாறு கடலூர் கோயிலிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான விசேட பூஜை வழிபாடும் கடல் மாதாவுக்கு கடலில் பூ தூவி அஞ்சலி நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
ஹட்டனிலும் பிரார்த்தனை
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
மலையக மக்களும் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர். ஹட்டன் காவல்துறையினர், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.













ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
