வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பாக அதிபர் தேர்தலில் இந்துக்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் மகாசிவாரத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பூஜை வழிபாடுகளுக்கு சென்ற நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் வருகை தந்து ஆலயத்தின் மகாசிவராத்திரி விழாவுக்கு இடையூறாக செயற்பட்டதுடன், கீழ்தரமாக காவல்துறையினர் நடந்து கொண்ட நடவடிக்கையானது உலக வாழ் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட செயற்பாடு
குறிப்பாக அந்த ஆலயத்தில் தொல்பொருளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வழமையான பூஜை வழிபாடுகளை செய்யலாம் என உத்தரவிட்ட போதும் அந்த வழிபாட்டுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தி இரவு மோசமாக நடந்துள்ளார்கள்.
அங்கு இருந்த பூசகர் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். கைது செய்ததுடன் அவர்களுடைய ஆடைகளை கூட களைந்திருக்கிறார்கள். வழிபாட்டுக்குரிய பொருட்களை அசிங்கப்படுத்தியுள்ளார்கள். தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இது முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடு. தொடர்ச்சியாக அந்த ஆலயத்தில் காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பௌத்த துறவி ஒருவர் அந்த இடத்திற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் தான் இந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டுளளது.
அதிபர் தேர்தல்
ஆகவே தொடர்ச்சியாக அந்த ஆலய வழிபாட்டுக்கு அரசாங்கம், அமைச்சர்கள், அதிபர் இடையூறுகளை செய்து கொண்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருந்து அபிவிருத்தி செய்கின்றோம் என்ற பெயரில் எந்தவித அபிவிருத்தியும் செய்யாது அரசாங்கத்தினதும், காவல்துறையினரதும் இந்த கெடுபிடிகளுக்கு நீங்கள் மௌனம் சாதித்துக் கொண்டு இருப்பதானது உங்களுக்கு வாக்களித்த வன்னி மக்களுக்கு செய்கின்ற பெரியதொரு துரோகமாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.
ஆகவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரோடு பேசி இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு காவல்துறையினர் தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற இடையூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அது தான் எதிர்கால உங்கள் அரசியல் பயணத்திற்கும் உதவும்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க ஒரு பக்கம் நல்லிணக்கத்தைப் பேசிக் கொண்டு இப்படியான கெடுபிடிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து குறிப்பாக இந்து கிறிஸதவ மக்களிடம் இருந்து வாக்குகளை பெறுவது என்பது கடினமானதாகவே இருக்கும்.
அதிபர் தேர்தலில் இந்துக்கள் அவருக்கான ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |