வெடுக்குநாறி மலை விவகாரம்: வலுக்கும் கண்டனங்கள்
வெடுக்குநாறி மலை வழிபாடுகளில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள இடைவெளியை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினமான நேற்றைய தினம்(8) இரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 7 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலை
இவர்கள் நெடுங்கேணி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் இரவு 6 மணிக்கு பின்னர் பக்தர்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
எனினும் காவல்துறையினரின் தடைகளை மீறி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை என சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை காவல்துறையினர் எடுத்து சென்றுள்ளனர்.
காவல் துறையினர் தாக்குதல்
இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், பாதணிகளுடன் ஆலயத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 7பேர் கைது செய்யப்பட்டுள்னர். பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரை கைது செய்திருந்தனர்.
எனினும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களை காவல்துறையினர் அங்கிருந்து வெளியியேற்றியுள்ளனர்.
பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர்
கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை(9) பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் வெடுக்குநாறி மலைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்ற நிலையில் நெடுங்கேணி காவல்துறையினர் அவர்களுக்கு தடை விதித்துள்ளனர்.
இதனால் குறித்த குழுவினர் ஜனகபுர பகுதியில் தரித்து நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
PEARL condemns the violent actions of the Sri Lankan police today, who have been disrupting a religious observance at the Veddukunaari Malai temple since this morning. Several Tamils have been arrested, including TNPF MP Kajendran.
— PEARL Action (@PEARL_Action) March 8, 2024
Events like this show the gap between the… https://t.co/XMjmJXSvjY
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |