மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு : வெளியானது காரணம்
சந்தையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் பல பிரச்சினைகள் காரணமாகவே மரக்கறிகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வெளிப்பாயாக தெரிவதில்லை
"மரக்கறிகள் சில்லறை சந்தையை அடையும் வரை விவசாயிகளிடமிருந்து இரண்டு இடைத்தரகர்கள் மூலம் செல்கின்றன.
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை வாங்குபவர்கள் அதனை இன்னொரு வாங்குபவருக்கு விற்கிறார்கள், இரண்டாவதாக வாங்குபவர்கள் மூலம் பங்குகள் சந்தைக்கு வருகின்றன.
இந்த முறைமையில் கொழும்பு தேயிலை ஏலத்தைப் போன்று வெளிப்படைத்தன்மை காணப்படுவதில்லை.
கொழும்பு தேயிலை ஏலத்தில் விற்பனை முடிவடையும் வரை வெவ்வேறு விலைகள் குறிப்பிடப்படும் திறந்த ஏல முறை இடம்பெறுகிறது.
ஆனால் இங்கே , காய்கறி விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தங்கள் விளைபொருட்களை மறுவிற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிவதில்லை.
நிகழ்நிலை வலையமைப்பு
இந்தச் செயன்முறையின் காரணமாக விவசாயியே இறுதியாக நஷ்டமடைந்து விடுகின்றான்."என்றார்.
தவிரவும், விவசாயிகளுக்கு மரக்கறிகளைப் பாதுகாப்பதற்கான சேமிப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டம் முன்மொழியப்பட்டு கடந்த 2019ல் ஆட்சிக்கு வந்த அரசு இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது இதுவும் விவசாயிகளின் நட்டத்திற்கும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பிற்கு காரணமாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு (2024) இந்த சேமிப்புக் கிடங்கு பணிகள் முன்னெடுக்கப்பட்டு முடிவடையும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், விவசாயிகளை உள்ளடக்கிய நிகழ்நிலை வலையமைப்பை அறிமுகப்படுத்தி, அதில் உள்ளீடுகளாக, மரக்கறிகளின் விலைகள் மற்றும் பிற தகவல்களை பதிவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக சந்தையில் சில வெளிப்படைத்தன்மையை கொண்டு வர முடியும்," எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.