நுவரெலியாவில் அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்
நுவரெலியாவில் மரக்கறி விலைகள் உயர்வடைவதற்கு போக்குவரத்து செலவுகளே காரணம் என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடருந்தில் மரக்கறிகளைக் கொண்டு செல்வதே இதற்கான தீர்வாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“நாட்டில் மரக்கறிகளின் விலை ஏன் குறைகிறது? ஏன் அவை அதிகரித்து வருகின்றன என ஒரு சமயத்தில் விளங்க முடியவில்லை.
விவசாய அமைச்சர் நடவடிக்கை
இடைத்தரகர்கள் மத்தியில் இயங்கும் மாபியாக்களை தடுத்து மரக்கறிகளுக்கு நிலையான விலையை பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சரும் ஏனைய அதிகாரிகளும் உழைக்க வேண்டும்.
விவசாயி, விற்பனையாளர், நுகர்வோர் ஆகியோரை சிக்கலில் தள்ளும் நிலையற்ற விலைக்கு பதிலாக நிலையான விலையே தேவை.
இன்று (24) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை பின்வருமாறு அமைகின்றது.
இதன்படி ஒரு கிலோ கிராம் கரட் 1250 ரூபா, லீக்ஸ் 470 ரூபா, முட்டைக்கோஸ் 470 ரூபா, பீட்ரூட் 520 ரூபா, கோலி பிளவர் 1300 ரூபா, பச்சை முட்டைக்கோஸ் 4100 ரூபா.
தொடருந்தில் காய்கறிகளைக் கொண்டு செல்லல்
இந்நிலையில் சில காய்கறிகளின் விலை கடந்த மூன்று நாட்களை விட 25% முதல் 30% வரை அதிகரித்துள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து எவ்வளவு குறைந்த மொத்த விலைக்கு கொடுக்கப்பட்டாலும் சிறிய அளவிலான மரக்கறிகளை கொண்டு செல்லும் போது போக்குவரத்து கட்டணத்தினால் ஏனைய மாகாணங்களில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது.
இதற்கு தீர்வாக தொடருந்தில் காய்கறிகளை கொண்டு செல்ல நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம், அதற்காக நாம் பல தியாகங்கள் செய்தாலும் அது நிறைவேறவில்லை.
அதனுடைய சோதனை முயற்சியாக, தொடருந்தில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் போது ஒரு கிலோவுக்கு எட்டு ரூபாய் மட்டுமே போக்குவரத்து செலவு ஆகின்றது.
காய்கறிகளை கொண்டு செல்ல ஏற்பாடு
தொடருந்தில் காய்கறிகளைக் கொண்டு செல்வதில் ஏற்படும் விரயத்தைக் குறைப்பதன் மூலம் அதிகபட்ச பயனை காய்கறிகளால் பெற முடியும்.
பாரவூர்திகள் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லும்போது மொத்த கிலோவில் 30% வீணாகின்றது அதற்கு காரணம் பாரவூர்தியில் காய்கறிகள் ஏற்றப்படும் விதம்தான்.
பின்னர் என்ன செய்வது, வீணாகும் காய்கறிகளின் விலையை நிர்ணயம் செய்து மற்ற காய்கறிகளை விலைகளைக் கூட்டி விற்பனை செய்கிறார்கள்.
இதை அரசாங்கம் கண்டறிந்து உரிய முறையில் காய்கறிகளை கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |