வாகனங்களின் விலையில் அதிகரிப்பு: வெளியாகியுள்ள முக்கிய தகவல்
வாகன இறக்குமதி வரிகள் மீதான 50% மேலதிகக் கட்டணத்தை டிசம்பர் 31 வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றையதினம்(ஓகஸ்ட் 15) முடிவடையவிருந்த இந்த மேலதிக வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R) வாகனத்தின் விலை சுமார் ரூ. 500,000 வரையிலும், டொயோட்டா ரைஸ் (Toyota Raize) ரூ. 1 மில்லியன் வரையிலும், ஹோண்டா வெஸல் (Honda Vezel) ரூ. 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்த்தப்பட்ட வரி
மேலும், டொயோட்டா பிராடோ (Toyota Prado) ரூ. 3 மில்லியனாலும், லேண்ட் குரூசர் (Land Cruiser) ரூ. 5 மில்லியனாலும், டபள் கெப் (Double Cab) வாகனங்கள் ரூ. 2 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரையிலும் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தற்போது விற்பனையகங்களில் உள்ள வாகனங்கள் மே 15 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், அவற்றுக்கு இந்த மேலதிக வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மே 15க்கு பிந்தைய கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |