சந்திரிக்காவுக்கு நெருக்கமானவரது பெயரில் புதிய கட்சி
பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் இலங்கை மக்கள் கட்சியின் முன்னாள் தலைவருமான விஜய குமாரதுங்கவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விஜயயிச மக்கள் விடுதலை முன்னணி என்று இந்தக் கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் கமல் ரோஹன ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
விஜய குமாரதுங்கவின் சகோதரியான ரூபா குமாரதுங்க உட்பட விஜய குமாரதுங்கவின் உறவினர்கள் சிலர் இணைந்து இந்தக் கட்சிய ஆரம்பித்துள்ளனர்.
எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தமது கட்சி போட்டியிடும் என கமல் ரோஹன ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
விஜய குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவர் என்பதுடன் இவர்களுக்கு விமுக்தி என்ற புதல்வரும் யசோதர என்ற புதல்வியும் உள்ளனர்.

