முன்னாள் போராளிகளை திரட்டி புதிய படையணி..! தனது நோக்கத்தை அறிவித்த கருணா
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய அம்மான் படை என்ற புதிய அமைப்பை ஸ்தாபிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவராக கடமையாற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் சவால்களுக்கு மத்தியில் தேசிய முன்னேற்றத்தின் தற்போதைய வரலாற்றை மேற்கோள் காட்டி எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இருந்த முந்தைய நிர்வாகத்தை விமர்சித்ததுடன் அந்த காலகட்டத்தில் தேசத்தின் வீழ்ச்சிக்கு அவரே காரணமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் போராளிகள்
மேலும், இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்வதில் ரணிலின் முயற்சிகளை அங்கீகரித்ததுடன் தற்போதைய தலைமையின் கீழ் தான் நாடு முன்னேற்றத்தைக் கண்டதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவானால் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக முரளிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு புதிதாக நிறுவப்பட்ட இயக்கத்தில் தனது தலைமைத்துவத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்ட புதுமையான உத்திகள் குறித்தும், குறிப்பாக முன்னாள் போராளிகள் மற்றும் போர் விதவைகளின் நலனில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |