பொது வேட்பாளரை ஆதரிப்பது ஒரு விசப் பரீட்சை: வினோ நோகராதலிங்கம் பகிரங்கம்
தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவு வழங்கினாலும் எனது ஆதரவு இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று (05) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் அதற்கு நான் உடன்பாடில்லை. அது ஒரு விசப் பரீட்சை. நான் வன்னி மக்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். அவர்களது நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடும்.
மக்களது அங்கீகாரம்
பொது வேட்பாளருக்கு வன்னியில் ஆதரவு இல்லை. பொதுவேட்பாளர் என்ற ஒன்று வெல்லப்போவதில்லை. சமஸ்டி உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி பொது வேட்பாளரை நிறுத்துகிறார்கள்.
ஆனால் அவர் குறைந்த வாக்குகளை பெறுகின்ற போது மக்களது அபிலாசைகளுக்கு தமிழ் மக்களது அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படும்.
என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி போன்ற தமிழ் தேசிய கட்சிகளும் இந்த கூட்டணியுடன் இணைந்து அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தி செயற்பட்டால் அதற்கு எனது ஆதரவு உண்டு. அப்போது தான் மக்கள் அதனை ஆதரிப்பார்கள்.
தமிழரசுக் கட்சி
ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னனி பகிஸ்கரிக்கிறது. தமிழரசுக் கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை. இதனால் தமிழ் வாக்கு சிதறும். சொற்பவாக்குகளையே பொது வேட்பாளர் பெறுவார்.
இது பாதிப்பை ஏற்படுத்தும். பொது வேட்பாளர் தெரிவில் ஏழு கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த கட்சிகளிடமோ அல்லது அந்த அமைப்புக்களிடமோ பொது வேட்பாளராக போடுவதற்கு ஆட்கள் இல்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்காத தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான சட்டத்தரணி கே.வி தவராசா மற்றும் அக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேந்திரன் (P. Ariyanethiran) ஆகியோரில் ஒருவரது பெயரை பரிசீலிக்கிறபார்கள்.
அவர்களிடம் வேட்பாளர் இல்லாது பொது வேட்பாளரை எதிர்க்கும் கட்சியிடம் வேட்பாளரை தேடும் நிலை என்றால் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |