மதுபானம் விற்பனை செய்வோரிற்கு முக்கிய அறிவித்தல்
மதுவரி அதிகாரிகளிடையே ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், மது போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும், அந்த நிறுவனங்களின் மதுபான உரிமங்களை இரத்து செய்யவும் நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
உள்ளூர் மதுபான வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்குள் சிசிரீவி அமைப்புகளை நிறுவ வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்
இதன் மூலம் அந்த அமைப்புகள் மதுவரி திணைக்களத்துடன் இணைக்கப்பட்டு உற்பத்தி செயல்முறையை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
சில மதுவரி அதிகாரிகளும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போலி பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபோத்தல்கள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மதுவரி அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கூடுதல் நடவடிக்கையாக, மதுபான உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் அனைத்து மதுவரித்திணைக்கள அலுவலர்களும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.