மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!
இந்தியாவின் மணிப்பூரில் நேற்று(04) இரவு மீண்டும் புதிதாக வெடித்த கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரின் குவாக்டா பகுதியில் இந்தக் கலவரம் நடந்துள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மீண்டும் கலவரம் வெடித்தது

இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை, "மத்தியப் படைகளின் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பாதுகாப்புப் பகுதியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் குவாக்டா பகுதிக்குள் கலவரக்காரர்கள் நுழைந்தனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வந்த சிலர் மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். குகி சமூகத்தினர் வீடுகள் பல எரிக்கப்பட்டுள்ளன.'' என தெரிவித்தது.
இந்தநிலையில் சம்பவ இடம்பெற்ற பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் கொள்ளை

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று வெடித்த கலவரத்தில் தந்தை, மகன் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாரன்சீனாவில் அமைந்துள்ள இரண்டு பாதுகாப்பு நிலையங்களை நேற்று(04) ஆயுதம் ஏந்திய கும்பல் முழுவதும் சூறையாடி, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்ளையடித்துள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.