ஈழத்து கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுப்பு - புலம்பெயர் தேச இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலை
வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் 36 வது தமிழ் விழாவில் கலந்துகொள்வதற்காக கவிஞர் தீபச்செல்வன் அவர்களால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசா இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய நிகழ்வுகளுக்கான விசா விண்ணப்பங்கள் அந்த நாட்டு தூதரகங்களால் மறுக்கப்படுகின்றமை தொடர்பான தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள தீபச்செல்லவன், இனிவரும் நாட்களில் இந்தியாவுக்கான வீசா கூட மறுக்கப்படுவற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய பரப்பில் குறிப்பாக போர்க்கால இலக்கியங்களில் அதிகம் அறியப்பட்ட தீபச்செல்வனின் இலக்கிய படைப்புகள் பெரிதும் யுத்தம் தின்ற ஈழ நிலத்தையும் அதன் தன்மைகளையும் சிங்கள அரசின் அடக்குமுறை திணிப்புகளையுமே கருவாக கொண்டு அமைந்து காணப்படும் நிலையில், கவிஞர் தீபச்செலவன் பெரிதும் அறியப்பட்ட தேடப்படுகின்ற ஒரு ஈழக்கவிஞராக இருந்து வருகிறார்.
நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் கவிஞர் தீபச்செல்வன்.
அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் சிறிலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை.
சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
36ஆவது தமிழ் விழா
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் (FeTNA) 36ஆவது தமிழ் விழா ஜூன் 30ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த நிகழ்வில் பங்குபெறுமாறு தீபச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை இல்லை, அமெரிக்காவில் குடியேறிவிடுவார் என்று கூறி அமெரிக்கத் தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.
இரண்டாவது தடவையாக விசா கோரி விண்ணப்பித்தபோதும், அதே காரணம் கூறப்பட்டு விசா மறுக்கப்பட்டதாக தீபச்செல்வன் கூறியுள்ளார்.