எதிர்க்கட்சியினர் மீது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ள இராஜாங்க அமைச்சர்
ஊடகங்களை அடக்குவது நாமல்ல எதிர்க்கட்சியினரே என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தால் தொடர்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது இருக்கின்ற கொரோனா சூழ்நிலை காரணமாகத் தான் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகிறன. அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை.
எதிர் கட்சியினர் தான் இவ்வாறு கூறுகின்றனர். அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது. வரவேற்கின்றது. எதிர் கட்சியினரே இவ்வாறு போலியாக அரசங்கத்தின் மீது பழி கூறுவதை நான் பார்க்கின்றேன். நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் கடன் வாங்க வேண்டும் அல்லது மக்களிடம் வரி எடுக்க வேண்டும். மக்களிடம் வரி எடுப்பது என்பது எமது நாட்டைப் பொறுத்தவரையில் மக்களுக்கு பாரிய சுமையாக மாறிவிடும். கடன் வாங்குவது என்பது சிக்கலான ஒரு விடயம். பாரிய முதலீடுகளை கொண்டு வருவது என்பது மிக முக்கியமானது.
நாட்டினுடைய இறைமைக்கும் பௌதிக வளத்திற்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் தான் அரசாங்கம் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. முதலீட்டை பொறுத்த வரையில் யாரும் நாட்டுக்குச் செய்ய முன்வரலாம் இந்தியாவாக இருக்கலாம் சீனா மற்றும் அமெரிக்காவாக இருக்கலாம் எவராக இருந்தாலும் முதலீடுகளை கொண்டுவரலாம் என்பதைத் தான் பிரசன்ன ரணதுங்க அன்றும் தெரிவித்திருந்தார்.
இந்த முதலீடுகளின் மூலமாக எம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாக இருந்தால் அதை நாங்கள் வரவேற்போம். அமைச்சர் பசில் ராஜபக்ஸ தூர நோக்குள்ள ஒருவர் பல அபிவிருத்திகளை செய்துள்ளார். அவருடைய வருகை மிக முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.