20க்கு வாக்களித்தோர் அரசின் முக்கிய விடயங்களில் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்கள் - இம்ரான் மஹ்ரூப்
ஒரே நாடு ஒரே சட்டம் இந்நாட்டில் சட்ட மூலமாகும் போது 20க்கு வாக்களித்தோர் அதற்கும் வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(Imran Mahroob) கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடைசி நிமிடம் வரை ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றாக ஒற்றுமையாக இருந்தவர்கள் திடீரென அந்தக் கட்சியின் நம்பிக்கைக்கும் மற்றும் முஸ்லிம் சமுகத்தின் நம்பிக்கைக்கும் துரோகம் செய்து 20க்கு கை உயர்த்தினார்கள். இதன் மூலம் சமுகத்திற்கு இதுவரை அவர்கள் பெற்றுக் கொடுத்ததது என்ன என்று கேட்க விரும்புகின்றேன்.
20க்கு வாக்களித்ததன் மூலம் இப்போது அரசின் பக்கம் தானே இவர்கள் உள்ளார்கள். அந்தப் பக்கத்தில் இருந்து தானே முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். காதி நீதிமன்றத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்கள். மத்ரசாக்களை மூட முன்னின்றார்கள். உலமாசபைக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்து அதனைக் கலைக்க வேண்டுமென்றார்கள்.
இந்தப் பிரச்சினைகளுக்கு இவர்கள் என்ன தீர்வைப் பெற்றுத் தந்தார்கள். ஞானசார தேரர் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இவர்கள் 20க்கு வாக்களித்து அதிகாரம் பெற்றுக் கொடுத்த அரசதலைவர் அது குறித்துப் பேசி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு(Mahinda Rajapaksa,) அல்லது அவர்கள் முற்று முழுதாக நம்பிக்கை வைத்திருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவோடு(Basil Rajapaksa) பேசி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம். இவை எதனையும் அவர்கள் செய்யவில்லை. மாறாக சாதாரண சங்கங்கள் தமது வரையறைக்குள் செய்வது போல ஞானசார தேரருக்கு எதிராக காவல்துறையிடம் முறைப்பாடு செய்வதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு படம் காட்டினார்கள்.
இதன் மூலம் நடந்தது என்ன? இவர்கள் யாருக்கு எதிராக காவல்துறையிடம் முறைப்பாடு செய்ததாக படம் காட்டினார்களோ அவர்தான் இன்று ஒரேநாடு ஒரே சட்டம் தொடர்பான அரசதலைவர் செயலணியின் தலைவர். இப்போது இவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள். இது தொடர்பாக யாரிடம் முறைப்பாடு செய்யப் போகின்றார்கள் என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
ஞானசேர தேரரின் பொதுபலசேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் காரியாலயத்தை திறந்து வைத்தவர் அப்போது பாதுகாப்பு அமைச்சு செயலாளராக இருந்த தற்போதைய அரசதலைவர் கோட்டாபய ராசபக்ச ( Gotabaya Rajapaksa) என்ற பகிரங்கமான விடயம் இவர்களுக்கு தெரியாத விடயமா? இப்போது இதே ஞானசார தேரர் தான் ஒரேநாடு ஒரே சட்டம் தொடர்பான அரசதலைவர் செயலணியின் தலைவர்.
முன்பொரு தடவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (Raouf Hakeem)சொன்னது போல கண்ணைத் திறந்து கொண்டு குழியில் விழுந்தவர்கள் தான் 20க்கு கை உயர்த்தியோர். இவர்களுக்கு தேவையானவை வழங்கப்பட்டாகி விட்டது. இதனால் தான் அரசின் முக்கிய விடயங்களில் இப்போது இவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்கள்.
இருப்பினும் இது அவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் சட்ட மூலமாகி நாடாளுமன்றத்திற்கு வாக்களிப்பிற்கு வருகின்ற போதும் இவர்களது ஆதரவை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற மந்திரம் அரசுக்குத் தெரியும். அதனால் ஒரே நாடு ஒரே சட்டம் ஆதரவாகவும் இவர்கள் வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.