வாக்னர் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டது இவ்வாறு தான்! மறைமுக கருத்தை வெளியிட்ட புடின்
ரஷ்யாவிற்கு சார்பாக செயற்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விளக்கம் ஒன்றை ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி, வாக்னர் கூலிப்படைத் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் பிரிகோஜின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
ஆக, பிரிகோஜின் புடினுடைய உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாகவும், அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
புடினின் அறிவிப்பு
இந்நிலையில், நேற்றிரவு ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், பிரிகோஜின் மரணம் தொடர்பில் சில புதிய தகவல்களை வெளியிட்டார்.
பிரிகோஜின் மற்றும் அந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் கையெறிகுண்டுகளின் துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செயின்ட் பீற்றர்ஸ்பர்கிலுள்ள Prigozhin உடைய அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், 10 பில்லியன் ரூபிள்கள் ரொக்கமும், 5 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருளும் கிடைத்ததாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
போதையில் பிரிகோஜின்
அப்படிப்பட்ட சுழலில், விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், அந்த சோதனை நடத்தப்படவில்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
அதாவது, விமானத்தில் பயணித்த Prigozhinம் மற்றவர்களும் போதையில், கையெறிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம், அதுவே விமானம் வெடித்துச் சிதறக்காரணமாக அமைந்திருக்கலாம் என மறைமுகமாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமானம் வெளியிலிருந்து தாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததையும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.