சிறிலங்காவில் தேடப்பட்ட சமிந்த சில்வா பிரான்ஸில் கைது
பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'இரத்மலானே குடு அஞ்சு' என அழைக்கப்படும் சிங்கராகே சமிந்த சில்வா பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) சிறிலங்காவுக்கு அறிவித்துள்ளது.
சர்வதேச காவல்துறையினரால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் இரத்மலானை கோணக்கோவில பிரதேசத்தில் வசிப்பவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மனைவி செய்த முறைப்பாடு
'குடு அஞ்சு' பல குற்றச்செயல்கள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்தார்.
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் குற்றவாளியை சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
