ரணில் இல்லையேல் அழிவடைந்த நாடுகளில் வரிசையில் இலங்கையும்: எச்சரிக்கும் மொட்டு எம்.பி
அடுத்த 5 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆட்சியில் அமர்த்தாவிட்டால் உலகின் அழிவடைந்த நாடுகளில் வரிசையில் இலங்கையும் இணைந்து கொள்ளும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க (Wimalaweera Dissanayake) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலருடன் நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர கூறுகையில், “இந்த நாட்டில் ஜனநாயகம், மனிதாபிமானம், நீதி, சட்டம், நியாயம் புதைந்து கிடக்கும் இறுதித் தருணத்தில் ஜனநாயகம் என்ற தீபம் அணையவிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தையும் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சட்டத்தையும் பாதுகாத்தார்.
இக்கட்டான நேரம்
எனது வாழ்நாள் முழுவதும் அவருடன் அரசியல் ரீதியாக முரண்பாடுகளை கொண்டிருந்த போதும் 2022 இல் ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினராக வாக்களித்தேன்.
அன்று மொட்டுக் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்தனர்.
ஜனநாயகச் சுடர் அணையவிருந்த இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க முடியும் என்பதை நாம் அறிந்திருந்தோம்.
அன்று அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்காமல் இருந்திருந்தால், அடுத்த 24 மணி நேரத்தில், ஜனநாயகத்தின் உச்சமாக விளங்கும் நாடாளுமன்ற எரிக்கப்பட்டு, இன்று பங்களாதேஷ் எதிர்கொள்ளும் நிலைக்கு இலங்கை வந்திருக்கும்.
காப்பாற்றிய ரணில் விக்ரமசிங்க
ஆனால் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் கட்டுப்படுத்தி ஜனநாயகத்தையும் சட்டத்தையும் பாதுகாத்தார். நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவருக்கான மரியாதையை நாம் அனைவரும் கொடுக்க வேண்டும்.
அவர் ஜனாதிபதியாக இல்லாவிடில் இன்று நான் உட்பட எவரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள். எங்கள் வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்மை அழிக்க நினைத்தார்கள்.
அந்தக் கொடூரத்தை இல்லாதொழித்து எங்களைக் காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க” என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |