இந்திய முதலீட்டாளருக்கு கொழும்பு கிழக்கு முனையத்தை விற்கும் அரசின் தீர்மானம்- பாரிய போராட்டத்திற்கு தயார்! அரசிற்கு எச்சரிக்கை
இந்திய இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரு குறித்த முதலீட்டாளருக்கு எதிராக விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்திய விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அதானி எனும் குறித்த முதலீட்டாளர், தற்போது இலங்கையிலும் சில முதலீடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் இந் நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குறித்த நபருக்கு விற்கவும் இந்த அரசு தீர்மானித்திருப்பதை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஒன்று கூட்டுனர் அருன் ஹேமசந்திரா, இலங்கை ஜனாதிபதி பதவியேற்க முன்னர் தாம் சுற்றுச் சூழலுடன் பாரிய ஈடுபாடுள்ளவராக சித்தரித்துக் கொண்டார்.
ஆனால் கடந்த வருடத்தில் மாத்திரம் ஒரு நாளைக்கு சுமார் 10 ஏக்கர் காணி அழிக்கப்பட்டது என்பதை, அவர்களது தரவுகளே கூறுகிறன. யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது, தேசிய சொத்துக்கள் விற்கப்படும் பிரச்சினையும் அதிகரித்து வருகின்றது, இவற்றினை அரசு உடன் நிறுத்தாவிட்டால் பாரிய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.