அங்கொட லொக்காவின் சகாவை சுட்டுக்கொன்றது 18 வயதான பெண்ணா?
முல்லேரியாவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 மற்றும் 55 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொரள்ளை மற்றும் முல்லேரியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான இந்த பெண்கள் ஹம்பாந்தோட்ட பந்தகிரிய பிரதேசத்தில் வீடொன்றில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லேரியாவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முல்லேரியா மீகாவத்தை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த இரண்டு பேர் ஒருவரை சுட்டுக்கொன்றனர்.
முற்றாக முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இந்த நபர்கள் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். அப்போது வீட்டின் அறையில் இரண்டு பேர் இருந்துள்ளதுடன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர், அங்கொட லொக்காவுடன் நெருங்கி செயற்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது.
இந்த கொலையை கைது செய்யப்பட்ட பெண்களில் 18வதான பெண் செய்தார என்ற சந்தேகத்தின் அடிப்டையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.