மாயாஜாலமாக இருக்கும் சொத்துக்கள்! வசந்த சமரசிங்க கிண்டல்
தனது சொத்து விபரங்கள் ஏனையவர்களுக்கு மாயாஜாலமாக இருந்தாலும் தனக்கு அது அவ்வாறு இல்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் இம்முறை தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் தான் முன்னிலைப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (18) அநுராதபுரத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியில் சிக்கல்கள் இல்லை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் பலரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பேசுபொருளாக மாறியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தனிப்பட்ட ரீதியில் தனது வருமானத்தை கட்டியெழுப்பியுள்ளமை தொடர்பில் தனது கட்சி அல்லது தனது கட்சித்தாரர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை.
கடந்த அரசாங்கங்களில் பொதுமக்கள் நிதியை திருடிய மற்றும் மோசடி செய்தவர்களுக்கே இவ்விடயம் ஒரு சிக்கலாக மாறியுள்ளது.
மேலும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் எவ்வித சிக்கல்களும் இல்லை என தெரிவித்தார்.
கீரி சம்பா அரிசி இறக்குமதி
இதேவேளை, 40, 000 மெட்றிக் டொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் போகத்தில் கீரி சம்பா அரிசி ஒரு கிலோவை 260 ரூபாயை விட குறைந்த விலைக்கு வழங்கி அரிசி மாபியாவை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
