ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்ற நாமே காரணம் : மொட்டுக்கட்சி பகிரங்கம்
சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியமைத்துள்ள இரு கட்சிகளும் அதிகாரத்துக்காக முரண்பட்டுக் கொண்ட நிலையில் 77 ஆண்டுகளாக நாட்டுக்கு எந்த சேவையும் செய்யாத ஒரு குழு இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைற்றியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.தே.க.விலிருந்து முற்றிலும் வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் செயலாளராக இந்த சம்மேளனத்தில் பங்கேற்றுள்ளேன்.
நாட்டை ஆட்சி செய்த கட்சிகள்
சுதந்திரத்துக்கு பின்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திர கட்சியே நாட்டை ஆட்சி செய்துள்ளது. இந்த இரு முகாம்களும் நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனாலும் அதிகாரத்துக்காக முரண்பட்டு எமது இரு தரப்புக்களும் பாரிய தவறிழைத்திருக்கின்றன. ஒருவரையொருவர் குற்றஞ்சுமத்தி இரு தரப்புக்களுமே இந்த தவறுகளை இழைத்துள்ளன.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்கு கடந்த 77 ஆண்டுகளாக எந்த சேவையும் செய்யாத குழு இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மக்களின் நம்பிக்கை
இறுதியில் இந்த இரு தரப்புக்களும் கள்வர்கள் என்றும், வன்முறையாளர்கள் நாட்டை நேசித்தவர்கள் என்றும் மக்கள் நம்பினர். நாடு மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என கட்சி செயலாளர்கள் பயமின்றி கூறும் சூழலே காணப்படுகிறது. இவ்வாறான ஜனநாயக விரோத சூழல் உருவாகுவதை தடுக்க வேண்டும்.
ஜனநாயகத்தை பாதுகாத்த தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார். அதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து பயணிக்க நாம் தயார்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
