கரிநாளாகும் சுதந்திர தினம்- உறவுகள் கிடைக்கும் வரை எமக்கு சுதந்திரம் இல்லை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1424 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் போது, பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திரதினத்தன்று காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் கிடைக்கும் வரையும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை.
சுதந்திர தினத்தினை நாங்கள் புறக்கணித்து கரிநாளாக கறுப்பு பட்டி அணிந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம் என வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஜ.நா சபை அமர்வில் எங்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் தொடர்ச்சியாக எங்கள் உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும் வீதியில் இறங்கி தொடர்சியாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் ஜ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு எந்த காலநீடிப்பும் கொடுக்காமல் எங்களுக்கான நீதியினை பெற்றுதரவேண்டும். சர்வதேச விசாரணை தான் வேணும் என்று சொல்லி நிக்கின்றோம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான நீதியினை பெற்றுத்தரமுடியவில்லை. இருந்தும் நாங்கள் அழுத்தங்களை கொடுக்கின்றோம் காணாமல் போன பிள்ளைகளை தேடிய பெற்றோர்கள் தொடர்ச்சியாக இறந்து கொண்டு போகின்றார்கள். கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் எதிர்வரும் 02 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
உலக நாடுகளில் உள்ள மக்கள் எங்களுக்கான ஆதரவினை தரவேண்டும் குரல் கெடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.