சமுர்த்தி பணத்தை பெற்று சென்ற வயோதிப பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சமுர்த்தி கொடுப்பனவை எடுத்துச் சென்ற வயோதிபப் பெண்
தெல்துவ சமுர்த்தி வங்கியில் 8 மாத சமுர்த்தி கொடுப்பனவை எடுத்துச் சென்ற வயோதிபப் பெண்ணிடம் 14500 ரூபாவை கொள்ளையடித்துச் சென்ற நபர் ஒருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நுகேகொட பனாபிட்டிய வீதி பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நூதனமாக திருட்டு
நுகேகொட பிரிவுக்கான சமுர்த்தி மானியம் நேற்று (28) தெல்துவ சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றதுடன், அந்த வங்கியில் 8 மாத நிலுவைத் தொகையை பெற்றுக்கொண்டு பண்டாரகம களுத்துறை வீதியில் களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்த சந்தேக நபர், “உங்களின் அடையாள அட்டை சரியாக உள்ளதா எனப் பார்க்கச் சொன்னதாக சமுர்த்தி மிஸ் சொன்னார்” என்று கூறியதையடுத்து, வயோதிபப் பெண் அடையாள அட்டையைக் காட்டியபோது அவரிடம் இருந்த 14500 ரூபா பணத்தைப் பறித்துக் கொண்டு நுகேகொட நோக்கி தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவரும் அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இறந்துள்ளதாகவும் , சமுர்த்தி பணத்தை பெற்றுக் கொண்டு உள்ளுர் கடையில் அரிசி, பருப்புகளை கொள்வனவு செய்த ஏறக்குறைய 7000 ரூபா கடனை செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் அருகில் நின்ற சந்தேக நபர்
மானியப் பணத்தைப் பெறும்போது சந்தேக நபர் அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டிருந்ததாக நேரில் கண்ட சாட்சியொன்று இருப்பதாகவும், அவர் யார் என்பதை அடையாளம் காண விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறை பரிசோதகர் கலும் சில்வாவின் பணிப்புரைக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.