வலுவிழந்தது “குலாப்” சூறாவளி! ஆனாலும் பலத்த மழை பெய்யும்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்துள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N - 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.