பசறை பகுதியில் மாயமான நபர்- தீவிர தேடுதலில் காவல்துறை!
பசறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் மாயமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாகவே காவல் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பசறை தெய்கிந்தகம பல்லேகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைக்கு பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபரே காணமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போன நபர் பராக்கிரம மாவத்தை 24/3 B எனும் விலாசத்தை உடைய மொஹமட் மொஹைதின் மொஹமட் மிலான் என்ற 68 வயதுடைய நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக தற்காலிக கூடாரத்துடன் அடித்துச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், குறித்த நபரை தேடும் பணிகளில் காவல்துறையினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.


