இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சியால் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 16.0N - 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85.0E – 95.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.