வங்க கடலில் புதிய காற்றழுத்தம்..! வடக்கு - கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை
மழை
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆனையிறவுக்கு மிகச் சரியாக கிழக்கு திசையில் 240 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடாவில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இது நாளை அல்லது நாளை மறுதினம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது கடந்த 14 மணி நேரத்திற்கும் மேலாக அசைவற்று வங்காள விரிகுடாவில் இருந்தமையால் சற்று வலுக் குறைந்த நிலையில் காணப்படுகிறது.
எனினும் பரவலாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று இரவு அல்லது நாளை காலை தொடக்கம் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம்
நாளை அதிகாலை தொடக்கம் வடக்கு மாகாணம் முழுவதும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும்.
கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.
அதே சமயம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
நாளை முதல் வடக்கு மாகாணத்தின் பகல் பொழுது பதிவு செய்யப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை குறைவடையும் என்பதனால் குளிரான வானிலை நிலவக்கூடும்.
குளிரான வானிலை
மழைவீழ்ச்சியுடன் கூடிய குளிரான வானிலை கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் கால்நடை வளர்ப்போர் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.